UP Election 2022: உ.பி.யில் 58 தொகுதிகளில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு

UP election updates
உ.பி.யில் 58 தொகுதிகளில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு

UP Election 2022: உத்தர பிரதேச மாநிலத்தில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

முதல் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், கடைசி மற்றும் ஏழாவது கட்ட தேர்தல், மார்ச் மாதம் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் மாதம் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

உத்தர பிரதேச மாநிலத்தில், பல முனை போட்டி நிலவினாலும், பாஜக – சமாஜ்வாதி ஆகிய கட்சிகளுக்கு தான் நேரடி போட்டி நிலவுவதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக பிரசாரம் செய்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுராவில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். சமாஜ்வாடி கட்சிக்காக அதன் தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சிக்காக அந்தக் கட்சியின் தலைவர் மாயாவதியும், காங்கிரசுக்காக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் களமிறங்கி பிரசாரம் செய்தனர். தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக நேற்று மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு, 11 மாவட்டங்களில் உள்ள 58 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. முதல் கட்ட தோ்தலில் ஜாட் சமூகத்தினா் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகள் அடங்கி உள்ளன. 9 தொகுதிகள் தாழ்த்தப்பட்டவா்கள், பழங்குடிகளுக்கான தனித் தொகுதிகளாகும். மொத்தம் 623 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 2.27 கோடி வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர்.

இதையும் படிங்க: Kamal Hassan: கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது- கமல் ஹாசன்