School Students: 30 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில்லை..!

tn_students
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்டான மாணவர்களுக்கு மறுதேர்வு

School Students: கோவையில், 30 சதவீத மாணவர்கள் தொடர் விடுமுறையில் உள்ளனர். இதில், பல மாணவர்கள் ஆசிரியர்களின் ஆய்வின் போது வீடுகளில் இல்லை. இதனால், பெற்றோர் வேலைக்கு அனுப்புகின்றனரா என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

கடந்த செப்., மாதம் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. ஜன., மாதம் மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு, பிப்.,1ம் தேதி முதல் முழுமையாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அரசு பள்ளிகளில், 30 சதவீத மாணவர்கள் தொடர் விடுமுறையில் இருப்பதாக மாவட்ட அளவில் தொகுக்கப்பட்ட பட்டியலின் வாயிலாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக, பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதவுள்ள பல மாணவர்கள் இதுவரை பள்ளிகளுக்கு வராமல் இருப்பதால், ஆசிரியர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

மாவட்ட பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தலின் படி, விடுமுறையில் உள்ள மாணவர்களின் பெற்றோரை, அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆசிரியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இருப்பினும், பல மாணவர்கள் பள்ளிக்கு வந்தபாடில்லை. மொபைல் போன் வாயிலாக தொடர்பு கொள்ள முடியாதவர்களின் இல்லங்களுக்கு, ஆசிரியர்கள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதில் பலர் இல்லங்களில் இல்லை என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில்,’கோவையில், ஒன்று முதல் பிளஸ்2 வரை, 30 சதவீத மாணவர்கள் இதுவரை பள்ளிக்கு வரவில்லை. கொரோனா அச்சம் காரணமாக பெற்றோர் சிலர் அனுப்பாமல் தயக்கம் காண்பிக்கின்றனர்.

கொரோனா தாக்கம்குறைந்துள்ளது; இதுவரை பள்ளிக்கு வந்த மாணவர்கள் பாதிக்கப்படவில்லை. திருப்புதல் தேர்வுகள் நடக்கவுள்ள நிலையில், கட்டாயம் அனுப்பிவைக்க வேண்டும்.தொடர் விடுமுறையில் உள்ள, சில மாணவர்களின் இல்லங்களுக்கு ஆசிரியர்கள் சென்றபோது, மாணவர்கள் வீடுகளில் இல்லை. பள்ளிக்கு செல்வதாக கூறி, பெற்றோரை ஏமாற்றி விட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றுகின்றனரா அல்லது பெற்றோரே மாணவர்களை, வேலைக்கு அனுப்புகின்றனரா என்ற சந்தேகம்எழுந்துள்ளது’ என்றார்.

இதுகுறித்து, மாவட்ட கலெக்டருக்கு தகவல் அளித்து நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: UP Election 2022: உ.பி.யில் 58 தொகுதிகளில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு