தென்னக திருப்பதி என்கிற ஒப்பிலியப்பன் கோயிலை தரிசியுங்கள் !

இறைவன் -திருவிண்ணகரப்பன்
இறைவி – பூமா தேவி

உப்பிலியப்பன் கோயில் 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும். இக்கோயில் தென்திருப்பதி என்று சிறப்பு பெற்ற கோயிலாகும்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையான கோயிலாக இது விளங்குகிறது.

தலவரலாறு , திருமாலின் மனதில் எப்போதும் லட்சுமி தேவி குடியிருப்பதை போன்ற பேறு தனக்கும் வேண்டும் என பூமாதேவி தனது கணவரான பெருமாளிடம் கேட்ட போது, பூலோகத்தில் மகரிஷி ஒருவருக்கு துளசி என்கிற பெயரில் மகளாக வளரும் போது, தனது இதயத்தில் இடப்பெறும் பேறு கிட்டும் என பெருமாள் வரமளித்தார்.

மகாலட்சுமியே தனக்கு மகளாக பிறக்க வேண்டி தவமிருந்த மார்கண்டேய மகரிஷி துளசி வனத்தில் கிடைத்த குழந்தையை எடுத்து சென்று துளசி என்று பெயர் சூட்டி தனது மகளாக வளர்த்தார் .துளசி பருவம் அடைந்ததும் மகாவிஷ்ணுவாகிய பெருமாள் ஒரு அந்தணர் வேடத்தில் வந்து மார்கண்டேய மகரிஷியிடம் அவரின் மகளான துளசியை மணமுடித்து தருமாறு கேட்டார்.

மார்கண்டேயரோ இளம் வயது பெண்ணான துளசிக்கு உணவில் சரியான பதத்தில் உப்பு சேர்த்து சமைக்ககும் பக்குவம் கூட அறியாதவள் என்பதால் அவளை மணமுடித்து தருவது நன்றாக இருக்காது என்று கூறினார். அந்தணரோ துளசி செய்யும் உப்பில்லாத உணவை தான் சாப்பிட தயார் என்று கூறினார். வந்திருப்பவர் அந்த திருமால் என்பதை உணர்ந்து தனது மகள் துளசியை அவருக்கே மணமுடித்து தந்தார்.

உப்பில்லா உணவை சாப்பிட ஒப்புகொண்டதால் உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமை கொண்டவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் பெயர் பெற்றார்.தென்னக திருப்பதி என்று ஒப்பிலியப்பன் கோவில் போற்றப்பட்டு வருகிறது.

அமைவிடம்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் என்கிற ஊரில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.