Family Planning: டார்கெட் முடிப்பதற்காக ஆண்களுக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு

tuticorin-kovilpatti-forced-family-planning-treatment
கட்டாய குடும்பக் கட்டுப்பாடு

Family Planning: டார்கெட் முடிக்க வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள வேம்பார் பகுதியை சேர்ந்த அப்பாவிகள், மதுவிற்கு அடிமையானவர்களை வலுகட்டயமாக அழைத்து சென்று குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள வேம்பார் சிந்தமணி நகரைச் சேர்ந்தவர் முத்துச்சேர்மன். இவருக்கு திருமணமாகி பஞ்சவர்ணம் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஆரம்பத்தில் முத்துச்சேர்மன் விறகு வெட்டும் தொழில் செய்து வந்த நிலையில், இடையில் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவ்வப்போது விறகு வெட்டுவதற்கு கூப்பிட்டால் தன்னால் முடிந்தால் சென்று வந்துள்ளார்.

தம்பதியினர் இருவருக்கு கல்வி அறிவு இல்லாத சூழலில் மிகவும் கஷ்டப்பட்டு தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் 25ம் தேதி முத்துச்சேர்மன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சூறவாளி என்று அழைக்கப்படும் நபர் மற்றும் சிலர் விறகு வெட்டும் வேலை உள்ளது கொஞ்சம் நேரம் தான் என்று கூறி முத்துச்சேர்மனை அழைத்துச்சென்றுள்ளனர். மாலையில் முத்துச்சேர்மன் மனைவி பஞ்சவர்ணம் வீட்டிற்கு வரும் போது, வீட்டில் முத்துச்சேர்மன் அழுது கொண்டு இருப்பதை கண்டு என்ன நடந்தது என்று கேட்டுள்ளார்.

அப்போது சூறவாளி உள்ளிட்ட சிலர் தன்னை வேலைக்கு என்று அழைத்து சென்று, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து , வலுக்கட்டயமாக வாயில் பஞ்சினை வைத்து தனக்கு குடும்பக்கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்து விட்டதாகவும், தனக்கு அதிகமாக வலி இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் மருத்துவமனையில் கொடுத்ததாக ரூ 1,100க்கு காசோலைiயும் கொடுத்துள்ளார்.

இதையெடுத்து பஞ்சவர்ணம் மற்றும் அவரது உறவினர்கள் முத்துச்சேர்மனை அழைத்து சென்ற சூறவாளியிடம் இது குறித்த கேட்ட போது, இதனால் யாரும் சாகபோவதில்லை, நானும் பண்ணி இருக்கேன் என்று கூறியது மட்டுமின்றி அவர்கள் கையில் கூடுதலாக ரூ 3 ஆயிரம் கொடுத்து, இந்த பிரச்சினையை விட்டுவிடுங்கள் என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பஞ்சவர்ணம் மற்றும் அவரது உறவினர்கள், ஒரு வழக்கறிஞர் உதவியுடன் சம்பந்தபட்ட சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவரிடம் கேட்ட போது,முத்துசேர்மன் சம்மதத்துடன் தான் குடும்பக்கட்டுப்பாடு செய்துள்ளதாகவும், விண்ணப்பத்தில் அவர் கைநாட்டு வைத்துள்ளதாகவும் பதில் கூறியுள்ளனர்.

இதையெடுத்து பஞ்சவர்ணம் குடும்பத்தினர் அனுமதியில்லமால் வலுக்கட்டயமாக அழைத்து சென்று குடும்பக்கட்டுபாடு செய்துள்ளதாகவும், ஏமாற்றி அழைத்து சென்ற வேம்பாரை சேர்ந்த சூறாவளி, முனியசாமி, கலசலிங்கம், செல்வராஜ் கணேசன் ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 28ம் தேதி புகார் அளித்துள்ளனர். ஆனால் தற்பொழுது வரை போலீசார் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், புகாரை வாபஸ் பெற வலியுறுத்தி பஞ்சவர்ணம் குடும்பத்தினருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாகவும். கூடுதல் பணம் தருவதாகவும், பிரச்சினையை விடுங்கள் என்று கூறுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே உடல் நிலை பாதிப்பில் இருந்த முத்துச்சேர்மனை வலுக்கட்டாயப்படுத்தி குடும்பக்கட்டுபாடு உள்ளதால் அவருடைய உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேம்பார் பகுதி என்பது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. அதன் அருகில் 15கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குடும்பக்காட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய வேம்பார் பகுதியில் இருந்து புரோக்கர்கள் மூலமாக ஆள்களை பிடித்து செல்வது பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. வேம்பாரில் அரசு மருத்துவமனை இருந்தும், இங்குள்ளவர்கள் குடும்பக்கட்டுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்காத நிலையில் அடுத்த மாவட்டத்திற்கு வலுக்கட்டயமாக அழைத்து செல்வதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக மதுவிற்கு அடிமையானவர்கள், சற்று மனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் என அப்பாவி ஆண்களை குறிவைக்கும் இந்த கும்பல் அவர்களிடம் நைசாக பேசி அழைத்து சென்று குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து வருவதாக கூறப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்ட எல்லையில் இருக்கும் நரிப்பையூரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கிற்கு மது அருந்த அதிகம் பேர் செல்வது வழக்கம். அப்படி செல்பவர்களை குறிவைத்து, மது குடிக்க பணம் பெற்று தருவதாக கூறி குடும்பக்கட்டுபாடு அறுவை சிகிச்சைக்கு புரோக்கர்கள் அழைத்து செல்வதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட முத்துசேர்மன் கூறுகையில் விறகு வெட்ட என்று அழைத்து சென்று வாயில் பஞ்சு வைத்து திணித்ததாகவும், தான் வேண்டாம் என்று கூறியதாகவும், ஆனால் தனக்கு ஆபரேசன் செய்து விட்டதாகவும் கூறினார்.

இது குறித்து வேம்பார் பகுதி சுகாதார ஆய்வாளர் பாலகண்ணன் பேசும்போது, குடும்பக்கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்ய வழிமுறைகள் உள்ளது. அது முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது தெரியவில்லை. கடந்த 2 மாதங்களில் 8 பேருக்கு இது போன்று அறுவவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பணத்திற்கு அசைப்படுவர்கள், மது பழக்கம் உடையவர்களை குறித்து வைத்து தான் குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், இதற்கு என்று புரோக்கர்கள் இருப்பதாகவும், நரிப்பையூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த செல்பவர்களை கண்காணித்து புரோக்கர்கள் ஆள்களை பிடித்து செல்வதாகவும், அப்பிரச்சினை குறித்து, தன்னுடைய மேல் அதிகாரிக்கும், சம்பந்தபட்ட அரசு மருத்துவமனைக்கு தகவல் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இப்பிரச்சினை தொடர்பாக சாயல்குடி வட்டார மருத்துவர் அலுவலர் சரவணன் என்பவரிடம் கேட்டபோது, கடந்த மாதம் ஆண்களுக்கான குடும்பக் கட்டுபாடு சிறப்பு முகாமிற்கு 7 பேர் வந்ததாகவும், அதில் அறுவை சிகிச்சை செய்த முத்துச்சேர்மனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி அவரது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர் ஒருவர் வந்ததாகவும் அவர்களிடம் முத்துச்சேர்மன் ஒப்பதல்வுடன் தான் செய்துள்ளதாக விளக்கம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியா முழுக்க எங்கு விருப்ப பட்டாலும் இந்த அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றும் கூறும் அவர், ‘ ஒரு வருடத்திற்கு இவ்வளவு குடும்பக்கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், நம்ம மாவட்டத்திற்கு நல்ல பெயரை வாங்கி தர வேண்டும் என களபணியாளர்களுக்கு வலியுறுத்துவோம், அதற்காக அவர்கள் அரசு கொடுக்கும் பணத்தினை விட கூடுதலாக, பணம் கொடுத்து குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ள கட்டாயப்படுத்துவது தெரியவந்துள்ளது. இந்த பிரச்சினை எழுந்ததும் தற்பொழுது குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்வதை நிறுத்தி வைத்துள்ளோம். இனிவரும் காலங்களில் தீவிர விசாரணை நடத்திய பின்னர் தான் குடும்பக்கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்வோம்’ என்றார்.

Tuticorin kovilpatti places forced family planning treatment

இதையும் படிங்க: Russian banks: விசா, மாஸ்டர் கார்டு சேவை நிறுத்தம்