புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நாளை முதல் மத்திய குழுவினர் ஆய்வு!

தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் நிவர், புரெவி புயல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களை ஆய்வு செய்ய தமிழ்நாடு வந்துள்ள மத்திய குழுவினர், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அலுவலர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினர்.

மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையில் மத்திய விவசாயிகள் நலத்துறை இயக்குநர் டாக்டர் மனோகரன், தேசிய நெடுஞ்சாலை துறை மண்டல அலுவலர் ரனஞ்ச் ஜெ சிங், நிதித்துறை இயக்குநர் சுமன், கிராமிய வளர்ச்சி துறை இயக்குநர் தர்ம்வீர் ஜா ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளரிடம் சேத விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர்.

மேலும் நிவரால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, ராம்நகர், பள்ளிகரணை, செம்மஞ்சேரி, சுனாமி காலனி, நூக்கம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளையும் மற்ற இடங்களை நாளை மறுநாளும் இரண்டு குழுக்களாக பிரித்து ஆய்வு செய்ய உள்ளனர்.இதனையடுத்து வரும் 8ஆம் தேதி முதலமைச்சர் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு அன்று
மாலை டெல்லியில் மத்திய அரசிடம் புயல் சேதம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.