வில்வித்தை தகுதி சுற்றுப்போட்டியில் தீபிகா குமாரி வெற்றி

வில்வித்தை தகுதி சுற்றுப்போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெற்றி பெற்றுள்ளார். அவர், ஒலிம்பிக் வில்வித்தை தகுதிச்சுற்றில் 9ஆவது இடம் பிடித்துள்ளார். இதன் மூலம், டோக்யோ ஒலிம்பிக் தொடரில் வில்வித்தை தகுதிச்சுற்று போட்டியில் தீபிகா குமாரி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

விளையாட்டு உலகின் உச்சபட்ச திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் இன்று தொடங்கியுள்ளன. இந்தியாவிற்காக முதல் போட்டியில் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி பங்கேற்று பலப்பரீட்சை நடத்தினார். மகளிர் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்று போட்டியில் 64 வீராங்கனைகள் பங்கேற்றதில் 663 புள்ளிகளை பெற்று இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 9 இடத்தை பிடித்தார்.

உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான தீபிகா குமாரி, அடுத்த சுற்று ஆட்டத்தில் பூட்டான் வீராங்கனை கர்மாவுடன் மோதவுள்ளார். இந்த போட்டி 28ம் தேதி நடைபெறவுள்ளது.

முதல் மூன்று இடங்களை தென் கொரிய வீராங்கனைகள் கைப்பற்றி அசத்தி இருக்கிறார். 680 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த அன் சேன் புதிய ஒலிம்பிக் சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். 1996 அட்லான்டா ஒலிம்பிக்கில் நிகழ்த்தப்பட்ட 673 புள்ளிகள் சாதனையை அவர் முறியடித்தார்.

தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த கொரிய வீராங்கனை அன் சென்னை காலிறுதியில் வீழ்த்தினால் ஒலிம்பிக்கில் இந்தியாவின் தீபிகா குமாரி தங்கம் வெல்வது உறுதி என தமிழ்நாடு வில்வித்தை சங்க தலைவர் உசைனி தெரிவித்துள்ளார். அவர், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த அவர் இதைத் தெரிவித்தார்.