டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆயுள் முழுவதும் செல்லும்

டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் அறிவித்துள்ளது

டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே சான்றிதழ் செல்லுபடியாகும். இதனால் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற வேண்டும் எனில், மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்த விதிமுறையில் தேசிய கல்விக் குழுமம் தற்போது மாற்றம் கொண்டுவந்துள்ளது. அதாவது, இனி ஒரு முறை டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆயுள் முழுவதும் செல்லும் என விதி திருத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சியடைந்து, சான்றிதழ் நீட்டிப்பு கோரி போராடி வருகின்றனர். இந்நிலையில், தேசிய கல்விக் குழுமம் மாற்றம் கொண்டு வந்துள்ளது ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் நாள்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவோருக்கு, ஆயுள் முழுவதும் செல்லும் வகையில் சான்றிதழ் அளிக்கப்படும் என்றும், ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழை நீட்டிப்பு செய்வது குறித்து சட்ட ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் எனவும் தேசிய கல்விக்குழுமம் தெரிவித்துள்ளது