இன்று தாக்கல் ஆகிறது தமிழகத்திற்கான இடைக்கால பட்ஜெட்

2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.

கடந்த இரண்டு முறை சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்றதுபோல், இந்த முறையும் அங்கேயே இடைக்கால பட்ஜெட் கூட்டம் நடைபெற இருக்கிறது. காலை 11 மணிக்கு துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்வது இது 10-வது முறையாகும்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. எனவே, வாக்காளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இந்த இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது.

சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், அது தொடர்பாக நிதித் துறைச் செயலாளர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிப்பார். மேலும், சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுவும் கூடி, சட்டசபை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்று முடிவெடுக்கும்.