பிளஸ்-2 தேர்வை பாதுகாப்புடன் நடத்த முடிவு

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகமானதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன்பிறகு பிப்ரவரி மாதத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஆனால் பிப்ரவரி மாத இறுதியில் இந்த 3 வகுப்பு மாணவர்களும் ஆல்பாஸ் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதன் பிறகு அவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நீடித்து வருகிறது.

பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடந்து வந்தன. பண்டிகைகள், தேர்தல் காரணமாக கடந்த 2-ந்தேதியில் இருந்து 6 நாட்கள் அவர்களுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பிளஸ்-2 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் முழுமையாக ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் நேற்று மீண்டும் வகுப்புகள் திறக்கப்பட்டன.

பிளஸ்-2 மாணவர்களுக்கு மே 3-ந்தேதி பொதுத்தேர்வு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு முன்னதாக ஏப்ரல் 16-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை செய்முறை தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.

ஆனால் கொரோனா பரவல் மிக அதிகமாக இருப்பதால் செய்முறை தேர்வு, பொதுத்தேர்வு இரண்டுமே ரத்து செய்யப்படலாம் என பேச்சு அடிபட்டது.

ஆனால் திட்டமிட்டபடி தேர்வை நடத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் செய்முறை தேர்வை திட்டமிட்டபடி நடத்துவது என்று முடிவு செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து செய்முறை தேர்வை பாதுகாப்பான முறையில் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் 23 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.