கன்னியாகுமரியில் மழையால் ஏற்பட்ட இழப்பிற்கு நிவாரணம் அறிவிப்பு !

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம், பயிர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த மிக கன மழையின் காரணமாக பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசித்த 767 பேர் 16 நிவாரண முகாம்களில், தங்க வைக்கப்பட்டு உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டன.

மொத்தம் 238 கூரை வீடுகள், 35 ஹெக்டேர் பரப்பில் பயிர்கள், 373 ஹெக்டேர் பரப்பில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் வெள்ளநீரால் சூழப்பட்டு உள்ளதாக முதல் நிலை அறிக்கை வந்துள்ளது.

மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து பகுதியாக சேதமடைந்த கூரை வீடுக்கு ரூ.4,100, முழுமையாக சேதமடைந்த கூரை வீட்டுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கப்படும்.

மானாவாரி, நீர்ப்பாசனம் பெற்ற நெற்பயிர்களுக்கும், இதர பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணமாக ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம், நெற்பயிர் தவிர இதர மானாவாரி பயிர்களுக்கு ரூ.10 ஆயிரம், பல்லாண்டு கால பயிர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கவும், தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.