TN Budget 2022: அரசு பள்ளியில் படித்து உயர்கல்விக்காக செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000..!

tn-budget-2022-rs-1000-per-month-for-students
மாணவிகளுக்கு மாதம் ரூ.1000

TN Budget 2022: அமைச்சர் பிடிஆர் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பெண் கல்வியை உறுதி செய்யும் விதமாக முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடப்பு ஆண்டுக்கான 2022-23 முழுமையான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறது. இதனால் பட்ஜெட் மீது மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இன்று காலை சட்டசபையில் பட்ஜெட் உரையைத் தொடங்கினார் நிதியமைச்சர் பிடிஆர். அப்போது ஜெயக்குமார் கைது, வேலுமணி வீட்டில் நடைபெற்ற ரெய்டு தொடர்பாக அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அமைச்சர் பிடிஆர் தனது உரையைச் சற்று நேரம் நிறுத்தினார். அதிமுகவினர் வெளிநடப்பு செய்த பின்னர், பிடிஆர் தனது பட்ஜெட் உரையைத் தொடர்ந்தார். இந்த பட்ஜெட் அறிவிப்பில், அவர் பல முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பெண் கல்வியை உறுதி செய்யும் விதமாக முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார். அதாவது அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர் கல்வி முடிக்கும் வரை மாதம் 1000 ரூபாய் அளிக்கப்படும் என அறிவித்தார்.

இதையும் படிங்க: Weather Update: டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

இது தொடர்பாக அமைச்சர் பிடிஆர், “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்றார் மகாகவி. ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும், திருமண உதவிக்காகவும் கருணாநிதி 1989ஆம் ஆண்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் தொடங்கப்பட்டது. மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்ய இத்திட்டத்தை மாற்றியமைப்பது அவசியமாகிறது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் இருப்பதைக் கருத்தில்கொண்டு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது. இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு ” தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும்.

இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம். இத்திட்டத்தின் மூலம், சுமார் ஆறு லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது.இந்தப் புதிய முன்முயற்சிக்காக, வரவு-செலவுத் திட்டத்தில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு வறிய நிலையில் உள்ள விதவையரின் மகள்களின் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம். டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என்று அவர் அறிவித்தார்.

இதையும் படிங்க: Sexual Abuse: பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய மெக்கானிக்