மு.க.ஸ்டாலின் முதல் சட்டசபை கூட்டத்தொடர்..!

இன்று புதிய எம்.எல்.ஏ.க் கள் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் நாளை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலும் நடத்தப்படுகிறது. சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள்.

நாளை நடைபெறும் கூட்டத்தில் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் முதல்-அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் சபாநாயகரை அவரது இருக்கையில் அமர வைப்பார்கள்.

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் சட்டசபை கூட்டத்தொடர் என்பதால் இந்த கூட்ட தொடருக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாளை புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பிறகு எத்தனை நாட்கள் சட்டசபை கூட்டத்தொடரை நடத்துவது என்பது பற்றி அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்கிறது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்டசபை கூட்டத்தொடரில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பது பற்றியும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள அ.தி.மு.க. இது தொடர்பான கோரிக்கைகளை காரசாரமாக எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய சட்டசபை கூட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகியோரை தவிர அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர். சட்டசபை கூட்டத்தொடரை அடுத்து கலைவாணர் அரங்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரங்க வளாகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

அடையாள அட்டை இருந்தவர்கள் தவிர வேறு யாரையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. கலைவாணர் அரங்கத்தை சுற்றியும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.