பா.ஜனதாவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கீடு

நேற்று மாலையில் எம்.ஜி.ஆர்.நகர் லீலாபேலஸ் ஓட்டலில் அ.தி.மு.க. அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம், பா.ஜனதா அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், அண்ணாமலை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.

இந்த பேச்சுவார்த்தை 3 மணிநேரம் நீடித்தது. இது பற்றி கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது கூறியதாவது:-

22 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எண்ணிக்கையில் பிரச்சனை எழவில்லை. தொகுதிகளை அடையாளம் காணுவதில் தான் சில பிரச்சனைகள் உள்ளது என்றனர்.

கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிகமான தொகுதிகளை பா.ஜனதா கேட்டுள்ளது. இதனால் அ.தி.மு.க.வுக்கு சாதகமான தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் இழுபறி ஏற்பட்டது. அந்த தொகுதிகளில் எதன் அடிப்படையில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது பற்றி ஒவ்வொரு தொகுதி பற்றியும் விவாதித்து முடிவு செய்துள்ளனர். பேச்சுவார்த்தை விபரம், தொகுதிகள் விபரம் பற்றி பா.ஜனதா தரப்பில் உடனடியாக டெல்லிக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

தொகுதிகளை உறுதிப்படுத்த ஒப்பந்தம் போடுவதற்காக தமிழக பா.ஜனதா பொறுப்பாளர் சி.டி.ரவி நாளை சென்னை வருகிறார்.

நாளை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்திக்கின்றனர். அப்போது பா.ஜனதாவுக்கான தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.