வங்கியில் ஏ.டி.எம். எந்திரம் கடத்தல்

திருப்பூரில் அதிகாலையில் கடத்தல் காரில் வந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் பல லட்சம் பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கிய ஊத்துக்குளி போலீசார் கொள்ளையர்கள் ஏ.டி.எம்.எந்திரத்தை கொள்ளையடித்து சென்ற காரின் நம்பரை வைத்து விசாரணை நடத்திய போது அந்த கார் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் மூங்கில்பாளையம் பிரிவு அருகே காலி இடத்தில் நிற்பது தெரியவந்தது.

காரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில், அந்த கார் பெருந்துறை அடுத்த நல்லிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமானது என்பதும், மின்சார வாரியத்திற்கு ஒப்பந்த முறையில் காரை பயன்படுத்தி வந்த நிலையில், அதனை கொள்ளையர்கள் கடத்தி சென்று ஏ.டி.எம். எந்திரம் கொள்ளைக்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது.