திருப்பதி திருமலையில்தான் அனுமன் பிறந்தா

திருப்பதி திருமலையில் அமைந்துள்ள சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்ரி என்ற மலையில்தான் ராம பக்தர் ஆஞ்சநேயராகிய அனுமன் பிறந்தார் என திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளது.

அனுமன் பிறந்த இடம் குறித்து, புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் பல்வேறு குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, ‘வெங்கடாசல மகாத்மியம்’ உள்ளிட்ட சில புராணங்களில் அனுமன் பிறந்த இடம் திருப்பதி திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலை என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஆய்வு செய்ய தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முரளிதர சர்மா தலைமையில் வல்லுனர்கள் அடங்கிய குழுவை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் நியமித்தது.

அந்தக் குழுவினர் 4 மாதங்களாக ஆய்வு நடத்தினர். அதனைத் தொடர்ந்து ஆய்வு அறிக்கையை நேற்று வெளியிட்டனர். அந்த அறிக்கையில் ‘திருமலை திருப்பதி கோயில் அமைந்துள்ள சோஷாசல மலைத் தொடரில் ஒன்றான அஞ்சனாத்ரி மலையில்தான் அனுமன் பிறந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம், ஹம்பியில் தான் அனுமன் பிறப்பிடம் என, இதுநாள் வரை கருதப்படுகிறது. அத்துடன், ஜார்க்கண்டில் உள்ள அஞ்சன் மலைப்பகுதி, குஜராத்தில் உள்ள நவ்சாரி, ஹரியானாவில் உள்ள கைத்தல் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் திரியம்பகேஸ்வர் அருகில் உள்ள அஞ்சனேரி உள்ளிட்ட இடங்களும் அனுமனின் பிறப்பிடமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.