பழங்கால சிற்பம் மற்றும் கல்வெட்டுகள் கண்டெடுப்பு – சேலம் !

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் அருகே உள்ளது உலிபுரம். இங்குள்ள சுவேதா நதியின் தென்கரையில், 16ஆம் நூற்றாண்டின் சிவன் கோயிலில் கல்வெட்டுகளும், நவகண்ட சிற்பங்களும் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் வெங்கடேசன் கூறுகையில்,” சேலம் கெங்கவல்லி அருகே உள்ள உலிபுரம் பகுதியில் சேலம் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் ஆய்வுகள் நடத்தினோம். அப்போது, சுவேதா நதியின் தென்கரையில், 16 ஆம் நூற்றாண்டின் சிவன் கோயில் முன்பு இரு கல்வெட்டுகளும், முன்புறமுள்ள வயலில் இரு நவகண்ட சிற்பங்களும் கண்டறியப்பட்டன. இதுகுறித்து தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இக்கோயிலின் முன்பு உடைந்த நிலையில் ஒரு துண்டு கல்வெட்டு காணப்படுகிறது. இதன் முன்புறம் சூரியன், பிறை நிலா, சூலம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. சிதைந்த நிலையில் 3 வரிகள் உள்ளன.

இரண்டாவது கல்வெட்டு கோயிலின் முன்புறம் நடப்பட்டுள்ள ஒரு பலகைக்கல்லில் இரு புறமும் 44 வரிகளுடன் உள்ளது. இக்கல்வெட்டு கி.பி.1531 ஆம் ஆண்டு அச்சுததேவ மகராயர் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது.

உலிபுரம் அம்பலத்தாடி நாயனார் சிவன் கோயில் இருந்த இடத்திற்கு முன்புறம் உள்ள வயலில் ஒரு புதருக்குள் இரு நவகண்ட நடுகல் சிற்பங்கள் கண்டறியப்பட்டன.

இரண்டும் ஒரே மாதிரியான சிற்ப அமைதியை கொண்டுள்ளன.ரு நடுகல் நவகண்டம் என உறுதி செய்ய இப்படி கழுத்துக்கு நேரே கத்தி காட்டப்படும். இடது கையில் ஒரு நீண்ட வாள் பூமியை தொட்ட நிலையிலும் உள்ளது. தோள்களில் தோள் வளையம், மணிக்கட்டில் கை வளையம், கால்களில் வீரக்கழலும் காணப்படுகிறது என தெரிவித்தார்.