மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி காலமானார் !

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பின் வழக்கில் 19 ஆண்டுகள் விசாரணை அதிகாரியாக இருந்த ஜி.சம்பந்தம் கொரோனாவால் உயிரிழந்தார்.

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் மீது 66 கோடி ரூபாய் சொத்துக்குவிப்பு புகார் எழுந்தது. இந்த விசாரணைக்குழுவில் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டவர் ஜி.சம்பந்தம்.

இந்த சொத்துக்குவிப்பு வழக்கு 2004ம் ஆண்டில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டபோது விசாரணையை கவனிப்பதற்காக பெங்களூரு அனுப்பப்பட்டார் சம்பந்தம்.

அவர் சிறப்பாக பணியாற்றியதால் 2007-ல் குடியரசுத் தலைவரின் சிறந்த சேவைக்கான விருது பெற்றார். மேலும் அவருக்கு 2009-ல் துணைக் கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அவர் பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.

செங்கல்பட்டு அண்ணா நகரில் வசித்து வந்த சம்பந்தம் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சை, கண்காணிப்பில் இருந்தும் நேற்று மாலை உயிரிழந்தார்.