தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சொக்கன் குடியிருப்பைச் சேர்ந்தவர் தனிஷ்லாஸ். இவரது மகன் செல்வன் (32), வாட்டர் கேன் சப்ளை செய்து வந்தார். கடந்த 17ஆம் தேதி இவரைச் சிலர் காரில் கடத்திச் சென்று கொலை செய்தனர்.

இது குறித்து திசையன் விளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தட்டார்மடம் அருகே உசரத்துக்குடியிருப்பைச் சேர்ந்த அ.தி.மு.க. தெற்கு மாவட்ட வர்த்தகர் அணித் தலைவர் திருமண வேலுக்கும், செல்வனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்துள்ளது.

இந்த பின்னணியில்தான் செல்வன் கொலை செய்யப்பட்டார் என்று விசாரணையில் தெரியவந்தது. ஏற்கனவே திருமண வேலின் தூண்டுதலில் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் வேண்டுமென்றே செல்வன் மற்றும் அவரது சகோதரர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்து துன்புறுத்தியதாகச் செல்வனின் அம்மா எலிசபெத் புகார் அளித்திருந்தார்.

இந்த சூழலில், செல்வனின் கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், திருமண வேல் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக 3 பேரைக் கைது செய்த போலீசார், தலைமறைவான திருமண வேல் மற்றும் சிலரைத் தேடி வந்தனர்.

இதற்கிடையே, இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். தட்டார்மடம் பகுதியில் விடிய,விடியப் போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களிடம் எஸ்.பி. நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதற்கிடையே, போராட்டத்தில் கலந்து கொண்ட திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் கார் அடித்து நொறுக்கப்பட்டது. அவர் கூறுகையில், தட்டார்மடத்தில் உயிரிழந்த செல்வன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்.

மேலும் செல்வன் மனைவிக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்றார்.கொலை வழக்கில் தேடப்பட்ட அதிமுக பிரமுகர் திருமண வேல் உள்பட 2 பேர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். சரண் அடைந்த இருவரையும் 3 நாள் சிறைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here