விரைவில் வருகிறது கல்விக்கான சேனல்கள் !

கொரோனா தொற்று வந்த பிறகு பள்ளிகள் மூடப்பட்டன.தற்போது பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.

தற்போது மாணவர்களுக்கு உதவியாக கல்வித் தொலைக்காட்சிக்கு 4 சேனல்கள் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி எடமலைப்பட்டிப்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று ஆய்வு நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவ- மாணவிகளைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்து அரசுப் பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்து வருகிறேன்.

மேலும் அவர் கூறுகையில்,கல்வித் தொலைக்காட்சிக்கு ஒரு சேனல் மட்டுமே உள்ள நிலையில், மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை, 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை, 9 மற்றும் 10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என 4 சேனல்கள் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.