ஏர் இந்தியாவை வாங்க டாடா குழுமம் ஆர்வம்

அரசு நிறுவனமான ஏர் இந்தியாவை வாங்க டாடா குழுமம் ஆர்வம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் 1932ஆம் ஆண்டு ஜே.ஆர்.டி. டாடாவால் டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. 1946ஆம் ஆண்டு ஏர் இந்தியா என்று பெயர் மாற்றம்செய்யப்பட்டு பொதுத் துறை நிறுவனமாகச் செயல்பட தொடங்கியது.

அதைத்தொடர்ந்து 1953ஆம் ஆண்டு, நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு ஏர் இந்தியாவின் பெரும்பாலான பங்குகளை வாங்கி, அதை அரசு நிறுவனமாக மாற்றியது.

அதன் பின்னர் சுமார் 60 ஆண்டுகளாக விமான துறையிலிருந்து விலகியிருந்த டாடா குழுமம், 2013ஆம் ஆண்டு மலேசியாவின் ஏர் ஏசியா நிறுவனத்துடன இணைந்து ஏர் ஏசியா இந்தியாவையும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஸ்தாரா என இரண்டு நிறுவனங்களைத் தொடங்கியது.

தற்போது உள்ள இந்த இரு நிறுவனங்களின் உதவியுடன் டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குமா அல்லது தனித்து வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளதா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.