பள்ளிகளை திறப்பது குறித்து நவ.9ஆம் தேதி தலைமை ஆசிரியர்களிடம் கருத்து தெரிவிக்கலாம்

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து நவ.9ஆம் தேதி தலைமை ஆசிரியர்களிடம் கருத்து தெரிவிக்கலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடந்து கொண்டு இருந்தபோதே நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிளஸ் 2 தேர்வின் இறுதி நாளான அன்று தொற்றின் வேகம் அதிகரித்தது. தேர்வு முடிந்த மறுநாளான மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் மாதம் நடக்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக கீழ் வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளும், 9,10,பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பாடம் நடத்தும் வகையில் பள்ளிகளும் நவம்பர் 16ம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், கொரோனா தொற்று முற்றிலும் முடிவுக்கு வராத நிலையில் தங்கள் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்ப முடியாது என்ற பெற்றோர் ஒட்டுமொத்தமாக மறுத்து வருகின்றனர்.

தமிழக அரசின் பள்ளி திறப்பு அறிவிப்பிற்கு எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து நவ.9-ம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கருத்து கேட்பு கூட்டம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமையில் காலை 10 மணி அளவில் நடைபெறும். 9,10,11,12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கருத்து கேட்பு கூட்டங்களில் பங்கேற்று கருத்து தெரிவிக்கலாம்.

கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள் கடிதம் வாயிலாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். கருத்து கேட்பு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளை திறப்பது குறித்து அரசால் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.