Pongal gift : பொங்கல் பரிசு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,௦௦௦

பொங்கல் பரிசு
பொங்கலுக்கு ரொக்க தொகை இல்லை

Pongal gift : பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் ரொக்கத்தையும் சேர்த்து வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், 21 பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என, தி.மு.க., தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்பட உள்ளது. 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு 1,088 கோடி ரூபாயும், கரும்பு வழங்குவதற்காக 71 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

வரும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல், ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என கூறப்படுகிறது. இதற்கிடையே, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாட, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2,500 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை ரொக்கப் பரிசு அறிவிக்கப்படாதது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன், 1,000 ரூபாய் ரொக்கத்தையும் சேர்த்து வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கொண்டாடப்படும் முதல் பொங்கல் பண்டிகை என்பதால், சிறப்புத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு வரும் நாட்களில் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. இந்த முறை கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளதால், 1,000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கப்படலாம் என கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: அழகுக்கு அழகு சேர்க்கும் நீளமான முடி..!

( tamil nadu govt planning to give 1000 rs with pongal gift package )