இரண்டு நாட்களில் கோவின் தளத்தில் தமிழ் மொழி இடம்பெறும் – தமிழக முதல்வர் !

கோவின் என்ற இணைய தளத்தில் மாநில மொழிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.கோவின் இணையதளத்தில் தடுப்பூசி செலுத்த விரும்புபவர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இதில் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் கோவின் இணையதளம் செயல்படுகிறது.ஆனால் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,ஒன்றிய அரசின் கோவின் இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இருந்த நிலையில் இன்று புதிதாக ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளபோது தமிழ்வழியில் அந்த இணையதளத்தைப் பயன்படுத்திட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இந்நிலை உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என ஒன்றிய அரசிடம் வலியுறுத்துமாறு மக்கள் நல்வாழ்வுத்துறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இதன்படி இந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு அலுவலர்களிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலர் வலியுறுத்தினார்.

அப்போது, இந்த இணைய வசதி படிப்படியாக பல்வேறு மாநில மொழிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் அடுத்தகட்டத்தில் இரண்டு நாட்களுக்குள் தமிழ்மொழியிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும் என ஒன்றிய அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.