வைரஸ் பாதிப்பில் இருந்து குணம் பெற்ற, 12 வாரங்கள் கழித்தும் அலுப்பு, சோர்வில் இருந்து மீள முடியாமல் பலர் சிரமப்படுகின்றனர். சுவாசிப்பதில் சிரமம், ‘நிமோனியா’ தொற்று, மார்பு பகுதியில் வலி போன்ற பிரச்னைகள் தொடர்ந்து இருக்கிறது.
வைரஸ் தொற்று குணமான மூன்று மாதங்களுக்கு பின்னும் இருமல், சுவையின்மை இருப்பதாக சொல்கின்றனர். தசைகள் வலி, உடல் வலி இரண்டும் பொதுவான பிரச்னைகள். அவசர சிகிச்சை பிரிவில் தங்கி சிகிச்சை பெற்றவர்கள், அந்த சூழலில் இருந்து வெளியில் வந்த பின், போர்க்காலத்தில் மாட்டிக் கொண்டு வெளியில் வந்ததை போன்று, மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
பக்கத்து படுக்கையில், அறையில், உயிரிழப்பை பார்ப்பதால் பதற்றம், மன அழுத்தம், படபடப்பு போன்ற மன நோய்கள் வருவதை தவிர்க்க முடிவதில்லை. தொற்று பாதித்து நான்கு வாரங்களுக்கு தீவிர அறிகுறிகள் இருக்கும். அதன் பின்னும் காய்ச்சல் இருந்தால், உடல் உள் உறுப்பில் வீக்கம் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.
நிமோனியா, சிறுநீரக தொற்று போன்ற தீவிர பிரச்னைகள் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
அறுபது சதவீத பேருக்கு உடல் சோர்வு பொதுவான பிரச்னையாக உள்ளது. சோர்வு இருக்கும் அனைவரையும் ‘விட்டமின் – சி, டி மற்றும் தைராய்டு’ பரிசோதிக்க சொல்ல முடியாது.
இதற்கான காரணம், நபருக்கு நபர் மாறுபடும். ஊட்டச்சத்து மிக்க உணவு, காலை 10:00 மணிக்கு, 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பது, விட்டமின் – டி அளவை அதிகரித்து, சோர்வை போக்க உதவும்.