ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்து குறித்து பேசிய அமித் ஷா !

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று லோக்சபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டது.மேலும் கடந்த 4ஆம் தேதி மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2021ஐ மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தாக்கல் செய்தார்.

மக்களவையில் பேசிய அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் மீண்டும் மாநில அந்தஸ்து பெறாது என்று எந்தவொரு இடத்திலும் எழுதப்படவில்லை. தற்போது கொண்டு வந்துள்ள மசோதாவானது ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்திற்கு எந்தவித பாதகமும் ஏற்படுத்தாது. யூனியன் பிரதேசமாக இருக்கும் ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிவித்தார்.