கோமாளி அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு பாடம் புகட்ட வேண்டும்- ஸ்டாலின்

மதுரை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு திமுக தலைவர் முக.ஸ்டாலின் பழங்காநத்தம் பகுதியில் பிரச்சாரம் செய்தார். மதுரை மாவட்ட புறநகர் பகுதியில் ஏற்கனவே இரண்டு முறை கிராம சபை கூட்டம் மற்றும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் ஆகிய பிரச்சாரங்களின் மூலம் வாக்கு சேகரித்து இருந்தார் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில், மூன்றாம் கட்டமாக மதுரை தெற்கு, வடக்கு, மேற்கு, மத்திய ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘கோமாளி அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு பாடம் புகட்ட தி.மு.கவிற்கு வாக்களிக்க வேண்டும். அ.தி.மு.க வெல்வதும், பா.ஜ.க வெல்வதும் ஒன்று தான். அ.தி.மு,க எம்.பி ரவீந்திரநாத், பா.ஜ.க எம்.பியாக செயல்பட்டு கொண்டு உள்ளார். ஒரு பா.ஜ.க உறுப்பினர் வந்தால் கூட அது நாட்டுக்கு மிக கேடு.

மதுரையில் எய்ம்ஸ் கொண்டு வருவோம் என 2016 இல் அறிவிக்கப்பட்டு அது கிடப்பில் உள்ளது. ஒரு செங்கல் கூட நகராமல் வீணாக உள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரும்.