அம்புலி மாமா கதை கூறுவதை விட்ருங்க- முதல்வருக்கு அறிவுரை கூறிய ஸ்டாலின்

தமிழகத்தில் உரிய வேலைத்திட்டங்களை ஏற்படுத்த முதலமைச்சர் பழனிசாமிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக தி.மு.க தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் உள்ள இளைஞர்களும் – ஏழை எளிய, நடுத்தர மக்களும் வேலை இழப்பு, வருமான இழப்பு என்ற இரட்டிப்புக் கொடுமைகளில் சிக்கி – தினமும் இன்னல்களினால் திணறிக் கொண்டிருப்பதை முதலமைச்சர் திரு. பழனிசாமி இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது பெரிய தவறு.

“இதோ முதலீடு வருகிறது. இதோ தொழில்கள் துவங்கப் போகிறது. இதோ வேலைவாய்ப்பு வரப் போகிறது” என்று கடந்த பத்து ஆண்டுகளாக சொன்ன ‘அம்புலி மாமா’ கதையையே திரும்பத் திரும்ப அ.தி.மு.க. அரசு கூறி ஏமாற்றி வருகிறது. அதிலும் குறிப்பாக, இந்த நான்கு ஆண்டுகளாக முதலமைச்சர் திரு. பழனிசாமி தமிழக மக்களிடம் “புரிந்துணர்வு ஒப்பந்தம்” என்று மட்டும் கூறியே காலத்தைக் கடத்தி வருகிறார்! மந்திரத்தால் மாங்காய் விழுந்துவிடாது என்பதை உணர வேண்டும்.

ஆகவே இனியும் இதுபோன்ற “திசைதிருப்பும்” வேலைகளில் ஈடுபட்டு – வேலைவாய்ப்பை இழந்து நிற்கும் தமிழக இளைஞர்களை ஏமாற்றாமல் – கிராமப் புறத்தில் உள்ள வேலை வாய்ப்புகளைப் பெருக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதேபோல் நகர்ப்புறத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கிட, பிரத்தியேகமாக ஒரு “நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை” அறிவிக்குமாறு முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .