மரண பயம் போக்கும் திருவாஞ்சியம் திருக்கோவில்!!

இறைவன் பெயர்:வாஞ்சிநாதர்,இறைவி பெயர்:மங்களநாயகி

இத்தலத்தில் யமதர்மனுக்கு தனி சந்நிதி இருப்பது ஒரு சிறப்பம்சம். கோவிலின் அக்னி மூலையில் எமனுக்கும், சித்ரகுப்தனுக்கும் தெற்கு நோக்கிய தனி சந்நிதி உள்ளது. அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவியை உடையதால் எமனை எல்லோரும் திட்டியதாலும், பல உயிர்களை எடுப்பதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் பொருட்டும் எமன் இத்தலம் வந்து தனக்கு ஏற்படும் பாவம் தீர சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். இறைவனும் உயிர்களை எடுக்கும் பாவமும் பழியும் எமனை வந்தடையாது என்று வரம் அளித்தார். மேலும் இத்தலத்தில் சிவனை தரிசனம் செய்பவர்களுக்கு மறு பிறப்பில்லாமலும், அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும் என்றும் அருளினார். அவ்வாறே இத்தலத்தில் க்ஷேத்திர பாலகனாக விளங்கும் எமனை முதலில் தரிசனம் செய்த பின்பே இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற வரமும் அளித்தார். அதன்படி நாள்தோறும் எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இங்குள்ள குப்தகங்கை தீர்த்தத்தில் நீராடி முதலில் யமனை வழிபட்டு பிறகே கோவிலில் மற்றவர்களை வழிபட வேண்டும் என்பது மரபாகும். மரணபயம், மனக்கிலேசம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவை நீங்கும். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது. இத்தலத்தில் எந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல் கோவில் மூடப்படுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள க்ஷேத்திரங்களில் திருக்கடவூருக்கு அடுத்தப்படி நிகரற்ற தலம் திருவாஞ்சியம் ஆகும்.

குப்தகங்கை தீர்த்தம்; மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்கள் பாவங்கள் தீர்ப்பதால் தன்னிடம் சேர்ந்துவிட்ட பாவங்களைக் போக்கிக் கொள்ள கங்கை இறைவனை வேண்டினாள். இறைவனும் எமனுக்கே பாவவிமோசனம் தந்த இத்தலத்தில் சென்று வழிபட்டு பிரார்த்தனை செய்யும்படி கூறினார். கங்கையும் தனது கலைகளில் ஒன்றைத் தவிர மற்ற 999 கலைகளுடன் இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் ஜக்கியமாகி தனது பாவங்களைப் போக்கிக் கொண்டாள். இத்தலத்து தீர்த்தமும் குப்த கங்கை எனப் பெயர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை நேரத்தில் ஈசனும், தேவியும் பிரகார வலம் வந்து குப்தகங்கை தீர்த்தக் கிழக்குக் கரையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கியருள்கின்றனர்.

அமைவிடம் :

கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் செல்லும் சாலையில் அச்சுதமங்கலத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது திருவாஞ்சியம். குடவாசலில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், திருவாரூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருவாஞ்சியம் திருத்தலம்.