Sewage tank: மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு

மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு
மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு

Sewage tank: மதுரை மாநகராட்சியில் கழிவுநீர் தொட்டி சீரமைப்பு பணியின் போது விஷவாயு தாக்கி 3 பணியாளர்கள பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் உள்ள மோட்டார் பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கழிவு நீர் செல்வதில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மோட்டார் பழுது நீக்குவதற்காக மதுரை மாடக்குளம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்ற மாநகராட்சி ஒப்பந்த பணியாளர் மற்றும் கோட்டைமேடு பகுதியை சார்ந்த லட்சுமணன் ,மாடக்குளத்தை சேர்ந்த சரவணன் ஆகிய மூன்று பேரும் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கழிவுநீர் தொட்டியில் உள்ள விஷவாயு தாக்கியதில் அடுத்தடுத்து மூன்று பணியாளர்களும் தொட்டியில் மயங்கி விழுந்துள்ளனர்.

இதனையடுத்து தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து கழிவுநீர் தொட்டியில் விழுந்த லட்சுமணன், சிவகுமார், சரவணனை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மீட்டனர். அவர்களை பரிசோதித்ததில் மூன்று பேரும் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: Mask in Tamil Nadu: தமிழகத்தில் “ மாஸ்க் ”அணியாவிட்டால் ரூ.500 அபராதம்..!

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கத்துரை ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். முன்னதாக சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த விஜய் ஆனந்த், ரமேஷ், லோகநாதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் தொட்டியை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்ட மூன்று ஒப்பந்த பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டு தொகை மற்றும் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் கழிவு நீர் தொட்டி பழுதுநீக்கும் மற்றும் சீரமைக்கும் பணிகளின் போது பணியாளர்களுக்கு சுவாச கருவி போன்ற உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காதது தான் இவர்களின் மரணத்துக்கு காரணம் என அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர். இன்னும் எத்தனை காலத்துக்கு தான் கழிவுநீர் தொட்டியில் அப்பாவி மக்களின் உயிர்கள் போகுமோ என சமூக ஆர்வலர்கள் தங்கள் ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மு.க.ஸ்டாலின் அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்ற மரணங்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: இங்கிலாந்து முதலீடுகளை இந்தியா வரவேற்கிறது – பிரதமர் மோடி