கல்விக்கென்று தனி வானொலி வேண்டும் கமல்ஹாசன் வேண்டுகோள் !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை வாட்டி வதைத்துள்ளது.மேலும் கொரோனாவின் மூன்றாம் அலை வரும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் மாணவர்களில் நலன் கருதி பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றது.

கல்விக்கெனத் தனி வானொலி தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில்,ளி உமிழும் திரையைத் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டும், ஹெட்செட்டுகளை நெடுநேரம் காதில் மாட்டிக்கொண்டும் இருப்பதால் மாணவர்களின் கண் பார்வை, செவி கேட்கும் திறனில் பிரச்சினை ஏற்படுகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

தலைவலி, கண் எரிச்சல், கண்களைச் சுற்றி கருவட்டம், சரியான தூக்கமின்மை போன்ற ஆன்லைன் வகுப்புகளின் விளைவுகளை எல்லாக் குடும்பங்களும் எதிர்கொள்கின்றன. இதற்கு வானொலி சிறந்த மாற்றாக இருக்க முடியும். இதன் மூலம் ‘ஸ்க்ரீன் டைம்’ கணிசமான அளவு குறையும்.

கல்வித் தொலைக்காட்சி போல தமிழக அரசு கல்விக்கெனத் தனி வானொலி அல்லது பண்பலை வரிசை தொடங்கலாம். திறன்பேசி, மடிக்கணினி, தடையற்ற இணையம் ஆகியவற்றிற்காகச் சிரமப்படும் மாணவர்களுக்கும் இது பயனளிக்கும் என்று கூறியுள்ளார்.