தமிழகத்தில் 9-ம் வகுப்பு வரை ஆல் பாஸ்

education-news-10-11-12-public-exam
பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

இந்த ஆண்டும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாகக் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் காலவரையறை இன்றி மூடப்பட்டன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வின்றித் தேர்ச்சி வழங்கப்பட்டது.

தொடர்ந்து வைரஸ் வேகமாகப் பரவியதால் ‌2020- 21ஆம் கல்வி ஆண்டு வழக்கமாகத் தொடங்கும் 2021 ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. எனினும் கொரோனா விடுமுறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகப் பள்ளி மாணவர்களுக்கு, கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டன. இதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.

கொரோனா 2-வது அலை


கொரோனா பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்துவந்த நிலையில், ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஜன.19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. பிப்.8-ம் தேதி முதல் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கின. எனினும் கொரோனா 2-வது அலை திடீரெனத் தாக்கியது. இதனால், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டன.

2020-21ஆம் கல்வியாண்டில் 1 முதல் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றித் தேர்ச்சி தேர்ச்சி வழங்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 சதவீதம், பிளஸ் 1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ் 2 செய்முறை மற்றும் அகமதிப்பீட்டுத் தேர்வில் பெற்ற 30 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு, இறுதி மதிப்பெண் வழங்கப்பட்டது.

இந்நிலையில் 2021-22ஆம் கல்வியாண்டு ஜூன் மாதத்திற்கு பதிலாக செப்டம்பர் மாதம் தொடங்கியது. செப்.1 முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் நேரடி வகுப்புகளில் சுழற்சி முறையில் இயங்கி வந்தன. கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்த நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல், 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வந்தன.

வேகமெடுக்கும் ஒமிக்ரான் தொற்று
தற்போது ஒமிக்ரான் தொற்று வேகமெடுத்து வருவதால், 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களே பள்ளிகள் இயங்கிய நிலையில், கொரோனா காரணமாக நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தொற்று பாதிப்பைப் பொறுத்து மேலும் நீட்டிக்கப்படலாம். இதனால் இந்த ஆண்டும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்குத் திட்டமிட்டபடி பொதுத் தேர்வு நடத்தவும் பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: Cyclinder Price: வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு