டிசம்பர் மாதம் பள்ளிகளை திறக்கலாமா? அரசு ஆலோசனை

பள்ளிகள், கல்லூரிகள் இப்போதைக்கு திறக்க வேண்டியது இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, டிசம்பர் மாதம் பள்ளிகளை திறக்கலாமா என்று அரசு ஆலோசித்து வருகிறது.

இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடந்து கொண்டு இருந்த போதே நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிளஸ் 2 தேர்வின் இறுதி நாளன்று தொற்றின் வேகம் அதிகரித்தது. தேர்வு முடிந்த மறுநாளான மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஏப்ரல் மாதம் நடக்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மற்ற கீழ் வகுப்புகளுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், பள்ளிகளை திறப்பதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை.

மேலும், கொரோனா தொற்று முற்றிலும் முடிவுக்கு வராத நிலையில் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாது என்ற பெற்றோர் ஒட்டுமொத்தமாக மறுத்து வருகின்றனர். குறிப்பாக எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாது என்று பெற்றோர் திட்டவட்டமாக மறுத்துவருகின்றனர். மேலும், பல பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மாற்றுச் சான்றுகளை வாங்கியும் சென்றுவிட்டனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு இடையே, பள்ளிகளை திறப்பது பற்றி பள்ளிக் கல்வித்துறை இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும், பள்ளிகளை திறப்பதற்கு இப்போது அவசியம் ஏற்படவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து வந்தார். இந்நிலையில், அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கை மேலும் சில தளர்வுகளுடன் நவம்பர் மாதம் இறுதிவரை மத்திய அரசு நீட்டித்து விட்டது.

கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துவிட்டது. அதே நேரத்தில் பள்ளிகள், கல்லூரிகளை முழுமையாக திறப்பது பற்றி எந்த இறுதி முடிவும் அறிவிக்கவில்லை. அதே நேரத்தில், பொதுத் தேர்வு எழுத உள்ள வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் பாடங்களில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும், தெளிவு பெறவும் நேரடியாக பள்ளிகளுக்கு சென்று, பாட ஆசிரியர்களை சந்தித்து தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் கேட்டுப்பெறலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துவிட்டது.

மேலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போது, கொரோனா தடுப்புக்கான விதிகளை பின்பற்றியே நடந்து கொள்ள வேண்டும் என்றும், பள்ளிகளும் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தி சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கலாம் என்றும் தெரிவித்துவிட்டது.