சாம்சங் குழுமத்தின் தலைவர் லீ குன் ஹி காலமானார்!!!

சாம்சங் குழுமத்தின் தலைவர் லீ குன் ஹி தனது 78 வயதில் நேற்று காலமானார்

அவரது மரணத்திற்கான முழுமையான காரணம் இன்னும் தெரியவில்லை. 2014ஆம் ஆண்டு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போதிலிருந்து இவர் மருத்துவ கவனிப்பில் வாழ்ந்து வருகிறார்.

இவரது காலத்தில்தான் சாம்சங் நிறுவனம் உலகத்தின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக வளர்ச்சி கண்டது. மேலும் இவர்தான் தென் கொரியாவின் பெரும் பணக்காரராகவும் இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 21 பில்லியன் டாலர்கள் என்கிறது ஃபோர்ப்ஸ்.

லி பியங் சல்லின் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் லி குன் ஹி. லி பியங் சல் தான் 1938ஆம் ஆண்டு சாம்சங் நிறுவனத்தை தொடங்கினார்.

1968ஆம் ஆண்டு தமது குடும்ப நிறுவனத்தில் இணைந்த லி குன் ஹி, தமது தந்தை இறந்த பிறகு அந்நிறுவனத்தின் தலைவராக 1987ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற சமயத்தில் அந்த நிறுவனம் தரமற்ற குறைந்த விலை பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாக இருந்தது.

லி குன் ஹி பொறுப்பேற்ற பின் அதனை முழுமையாக மாற்றினார். நிறுவனத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.

1993 ஆம் ஆண்டு தமது ஊழியர்களிடம், “உங்கள் மனைவி, குழந்தைகளைத் தவிர மற்ற அனைத்தையும் மாற்றுங்கள்,” என லி கூறி இருக்கிறார். இந்த வசனமும் அப்போது பரவலாகப் பேசப்பட்டது. இதன் காரணமாக அவரும் பேசப்பட்டார்.

அவர் பேசியதுடன் நிற்கவில்லை அப்போது தமது நிறுவனம் தயாரித்த 150,000 கைப்பேசிகளை எரித்து இருக்கிறார்.

அவர் ஊடகங்களிடம் எப்போதாவது தான் பேசுவார். சந்நியாசி போல இருக்கிறார் எனப் பெயர் பெற்றதால் அவர் துறவி அரசர் என அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.