அரசியல் சுயநலனுக்காக அவதூறு பேச்சு: அண்ணாமலை கண்டனம்

”அரசியல் சுயநலத்திற்காக இந்து மக்களையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தி சிலர் பேசி வருகின்றனர்,” என, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவை காரமடையில் பா.ஜ., நிகழ்ச்சியில், அண்ணாமலை பேசியதாவது:கடந்த, 53 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் மாறி, மாறி ஆட்சி செய்துள்ளன. ஏழைகள் இன்னும் ஏழையாகவே உள்ளனர். மத்திய பா.ஜ., அரசு, வீடு இல்லாதவர்களுக்கு, 2.77 லட்சம் ரூபாயில் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம், உட்பட, 17 சலுகைகளை வழங்கியுள்ளது. இதனால் ஏழையாக இருந்தவர், நடுத்தர மக்களாக உயர்ந்துள்ளார். நடுத்தர வர்க்கத்தினர் தொழில் துவங்க, மத்திய அரசு கடன் வசதி செய்து கொடுத்துள்ளது.பிரதமர் மோடி அறிவிக்கும் திட்டங்களில் ஊழல் எதுவும் நடப்பதில்லை. திராவிட கட்சிகள், குடும்ப அரசியலையும், குறுநில மன்னர்களையும் உருவாக்கியுள்ளது. நேர்மை, சுயமரியாதை, தேசியம், ஆன்மிகம் கலந்த பாதையை பா.ஜ., உருவாக்கியுள்ளது.

தி.மு.க., கூட்டணியில் உள்ள திருமாவளவன், இந்து பெண்கள், இந்து தர்மம் குறித்து அவதுாறாக பேசியுள்ளார். அரசியல் சுயநலத்திற்காக இவ்வாறு இந்துக்களையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தி பேசுகின்றனர். வரும் தேர்தலில் இவர்களை புறக்கணிக்க வேண்டும். சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., பெரிய அளவில் போட்டியிட உள்ளது. இவ்வாறு, அண்ணாமலை பேசினார்.