Russia-Ukraine Crisis: உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தும் நிலையில் அங்குள்ள இந்திய மாணவர்கள் போலந்து, ஹங்கேரி, ருமேனியா, சுலோவாக்கியா ஆகிய அண்டை நாடுகளுக்கு வரவழைக்கப்பட்டு அங்கிருந்து மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுகிறார்கள்.
‘ஆபரேஷன் கங்கா’ என பெயரிடப்பட்ட இந்த பணிகளை தொடங்கிய மத்திய அரசு ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர் ஏசியா ஆகிய விமானங்களை அந்த நாடுகளுக்கு அனுப்பி மாணவர்களை மீட்டு வருகிறது.
உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்த 16 ஆயிரம் இந்தியர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் 76 விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 170 மாணவர்கள் இன்று மாலை சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். இது தொடர்பாக அப்துல்லா எம்.பி. கூறியதாவது:-
போர் தொடர்ந்து நடைெற்று வருவதால் ஹங்கேரி, சுலோவாக்கியா ஆகிய நாடுகளில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து ருமேனியாவில் இருந்து மட்டும் மீட்பு விமானங்கள் இந்தியர்களை அழைத்து வருகின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 60 பேர் நேற்று இரவு டெல்லி வந்துள்ளனர். இன்று காலையில் மேலும் 110 தமிழக மாணவர்கள் டெல்லி வந்தனர். இந்த 170 பேரும் இன்று மாலை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
உக்ரைனில் இருந்து இதுவரை இந்தியர்கள் 75 சதவீதம் பேர் மீட்டு வரப்பட்டுள்ளனர். வசதி படைத்த மாணவர்கள் மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று போர் தொடங்குவதற்கு முன்பே இந்தியா வந்து விட்டனர்.
அப்போது சுமார் 300 பேர் வரை வந்திருந்தனர். மத்திய அரசிடம் உதவி கேட்காமலேயே அவர்கள் வந்து விட்டதால் அவர்களை பற்றிய விவரம் வெளியிடப் படவில்லை.
தற்போது இந்தியர்கள் சுமார் 1000 பேர் மட்டுமே உக்ரைனில் இருக்கிறார்கள். இனி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டால்தான் மீட்பு பணிகளை தொடர முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: oilve oil benefits for skin : ஆலிவ் எண்ணெயின் நன்மைகள்



