பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது..!

போதைப்பொருள்கள் தமிழகத்தில் வினியோகம் செய்வதற்காக கொண்டு வரப்பட்டதா? அல்லது இங்கிருந்து வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு வைக்கப்பட்டு இருந்ததா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக போதைப்பொருள்கள் கடத்தப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து கடலோரக் காவல்படையினர், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு மற்றும் அனைத்து உளவுப்பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், தூத்துக்குடிக்கு வரும் சரக்கு பெட்டகங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது பிரேசில் நாட்டில் இருந்து தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு மரக்கட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டன. அந்த மரக்கட்டைகள் கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டு பனாமா நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்கு இருந்து மரக்கட்டைகள் வைக்கப்பட்ட 8 கன்டெய்னர்கள் கப்பல் மூலம் இலங்கை வழியாக தூத்துக்குடிக்கு நேற்று அதிகாலையில் வந்து சேர்ந்தன. இந்த கப்பலில் 24 மாலுமிகள் இருந்தனர்.

கப்பலில் சந்தேகப்படும்படியாக இருந்த 6 கன்டெய்னர்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.

பின்னர் அந்த கன்டெய்னர்களில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஒரு கன்டெய்னரில் மரத்தடிகளுக்கு இடையே கருப்பு நிற சிறிய மூட்டைகளாக மொத்தம் 28 மூட்டைகள் இருந்தன. அந்த மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் கொக்கைன் உள்ளிட்ட சுமார் 300 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்கள் பதுக்கி கடத்தி வரப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இந்த போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.1,500 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.