‌கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்

கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல்வேறு மாநிலங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்த நிலையில், கர்நாடக உள்துறை செயலர் ரூபா ஐபிஎஸ் தனது பேஸ்புக் பக்கத்தில், “பட்டாசு வெடிப்பது இந்து மத வழக்கம் கிடையாது.

இதை சொல்வதால் இந்து மதத்தை தாக்கிப் பேசுவதாக கூறுபவர்கள், புராணங்களிலும் வேதங்களிலும் பட்டாசு வெடிப்பது பற்றி எந்த பதிவும் இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஐரோப்பியர்கள் மூலமாக தான் இந்தியாவுக்கு பட்டாசு அறிமுகமானது” என்று எழுதியிருந்தார்.

இதற்கு ‘ட்ரூ இந்தாலஜி’ என்ற ட்விட்டர் பக்கத்தில், ‘பண்டைய வேதங்களில் பட்டாசு குறித்து ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன’ என சில ஆதாரங்களுடன் ரூபாவுக்கு பதிலளிக்கப்பட்டது. இந்நிலையில் ‘ட்ரூ இந்தாலஜி’ ட்விட்டர் பக்கம் திடீரென முட‌க்கப்பட்டது. ஐபிஎஸ் அதிகாரி ரூபாவின் புகாரின் பேரில்தான் இந்த ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக தகவல் வெளியானது