ரேஷன் கடைகளை கூடுதல் நேரம் திறந்துவைக்க தமிழக அரசு உத்தரவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளை கூடுதல் நேரம் திறந்துவைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

அரிசி அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் இந்த பொருள்கள் பல குடும்பங்களில் பசியை போக்க இன்றியமையாததாக உள்ளது.நவம்பர் 4ஆம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாத மளிகைப் பொருள்களை விரைவாக அளிக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தமிழக அரசு ரேஷன் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகைக்கு அனைத்துப் பொருள்களும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நவம்பர் 1, 2, 3 ஆகிய நாள்களில் கடைகள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

முன்னதாக சமூக வலைதளங்களில் அரசு ஊழியர்கள், அதிக ஆண்டு வருமானம் உள்ளோர், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு ரேஷனில் அரிசி வழங்கப்படாது என ஒரு தகவல் பரவியது. இதை மறுத்துள்ள தமிழக அரசு இது முற்றிலும் வதந்தி என கூறியுள்ளது.