பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு

உத்தரகாண்ட் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள ஹரித்வார் மாவட்டத்தின் பஹத்ராபாத் பகுதி எல்.எல்.ஏவாக உள்ளார் சுரேஷ் ரத்தோர். பா.ஜ.கவைச் சேர்ந்த அவர் மீது பா.ஜ.கவைச் சேர்ந்த பெண் ஒருவர், ரத்தோர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவருடைய புகாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரத்தோர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியிருந்ததால் அப்போதே புகார் அளிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேஷ் ரத்தோர் மீது காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த பஹ்ரதாபாத் காவல்நிலைய எஸ்.ஐ மகேந்திர புன்திர், ‘சுரேஷ் ரத்தோர் மீது 376-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது’ என்று தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தெரிவித்த ரத்தோர், ‘நான் மக்கள் பிரதிநிதியாக உள்ளேன். நான் சட்டத்தைப் பின்பற்றி நடக்கக்கூடியவன்.

அதனால், நீதிமன்றம் மற்றும் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவேன். என்னை ஆரம்பத்தில் மிரட்டிய சமூக விரோதிகளால் என் மீது தவறாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது. அதனால், காவல்துறை பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என் மீது தொடரப்பட்டுள்ள இந்த வழக்குகள் அடிப்படை ஆதாரமற்றவை’ என்று தெரிவித்துள்ளார்.