Ranil Wickremesinghe : இலங்கையில் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமனம்

கொழும்பு: இலங்கையின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து அரசுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபட்ச தனது மனைவி மற்றும் பாதுகாவலர்களுடன் ராணுவ விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதை அடுத்து, இலங்கையின் இடைக்கால அதிபராக அந்நாட்டின் பிரதமர்ரணில் விக்ரமசிங்கே (Sri Lankan PM Ranil Wickremesinghe) நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய அதிபர் ராஜபட்ச வெளிநாட்டில் இருக்கும் போது அவரது கடமைகளை நிறைவேற்றுவதற்காக பிரதமர் விக்ரமசிங்கே இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். இது அரசியலமைப்பின் 37(1) பிரிவின் கீழ் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

73 வயதான அதிபர் கோத்தபய ராஜபட்ச தனது மனைவி மற்றும் பாதுகாவலர்களுடன் இராணுவ ஜெட் விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறியதாக இலங்கை விமானப்படையின் சுருக்கமான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபட்ச இலங்கையை விட்டு வெளியேறிய செய்தி பரவியதையடுத்து, காலி முகத்திடலில் திரண்டிருந்த அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் கூடி அரகலயத ஜெயவேவா என்று குரல் எழுப்பினர் “போராட்டத்திற்கு வெற்றி” என்ற பிரபலமான சொற்றொடரை சிங்களத்தில் கோஷமிட்டனர்.

தலைநகரின் மூன்று முக்கிய கட்டிடங்களான அதிபர் மாளிகை, அதிபரின் செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தை எதிர்ப்பாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர், 22 மில்லியன் மக்கள் வசிக்கும் இலங்கை, முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார சிக்கலின் பிடியில் உள்ளது, இதனால், லட்சக்கணக்கான‌ மக்கள் உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வாங்க போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கை தற்போது திவால் ஆன‌ நாடாக மாறியுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) கடந்த வாரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.