பெரியார் சிலை அவமதிப்பு: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை தேவை – ராமதாஸ்

திண்டுக்கல் மாவட்டத்தில் பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதஸ் வலியுறுத்தியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் காவிச்சாயம் பூசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், “திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் தந்தை பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டிருப்பது கோழைத்தனமான செயலாகும். இச்செயலை செய்தவர்கள் தாங்கள் கோழைகள் என்பதை தொடர்ந்து நிரூபித்தி வருகின்றனர்.

தந்தை பெரியாரின் கொள்கைகளை, கொள்கைகளால் எதிர்கொள்ள துணிச்சல் இல்லாதவர்கள் தான் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் பின்னணியில் உள்ள நச்சுக்கிருமிகள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

திருச்சி இனாம்புலியூரில் கடந்த மாதம் இதே நாளில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கும், இன்றைய நிகழ்வுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும். இரு குற்றங்களிலும் சம்பந்தப்பட்டவர்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.