ரஜினி கட்சியில் இணைய மாற்று கட்சியினர் அதிக ஆர்வம்

நடிகர் ரஜினிகாந்த் வருகிற 31-ந்தேதி புதிய கட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில, ரஜினிகாந்த் தொடங்க உள்ள புதிய கட்சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழக அரசியல் களத்தில் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை தருவேன் என்றும், “மாத்தணும், எல்லாத்தையும் மாத்தணும்”, “இப்போ இல்லைன்னா எப்போதும் இல்லை” என்பது போன்ற கோ‌ஷங்களை முன்னெடுத்துள்ள ரஜினிகாந்தின் அரசியல் பயணம் நிச்சயம் வெற்றியில் முடியும் என்பதே ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதையடுத்து ரஜினி மக்கள் மன்ற பணிகள் மீண்டும் வேகம் எடுத்துள்ளன. பூத் கமிட்டிகளை அமைப்பது, ரஜினி மக்கள் மன்றத்துக்கு புதிதாக ஆட்களை சேர்ப்பது போன்ற பணிகளை மக்கள் மன்ற நிர்வாகிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதன் மூலம் ரஜினியின் அரசியலை “ரஜினியி‌ஷம்” என்ற பெயரில் மக்கள் மத்தியில் மன்ற நிர்வாகிகள் பிரபலப்படுத்தி வருகிறார்கள்.

ரஜினியின் புதிய கட்சியில், மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்களும், அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் எதிராக புதிய மாற்றத்தை விரும்புபவர்களும் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் கடந்த 3-ந்தேதி தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்த பிறகு பல்வேறு தரப்பினரும் ரஜினி மக்கள் மன்றத்தில் சேர்ந்து வருகிறார்கள். அதி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் ரஜினியின் ரசிகர்களாக இருந்தவர்களும், பழைய எம்.ஜி.ஆர். ரசிகர்களும் ரஜினி கட்சியில் சேர முனைப்பு காட்டி வருகிறார்கள்.

ரஜினி மன்ற மாவட்ட செயலாளர்களை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ள மற்ற கட்சியினர் ரஜினியின் புதிய கட்சியில் இணைந்து தீவிரமாக செயல்பட தீர்மானித்துள்ளனர்.

ரஜினி மக்கள் மன்றத்தில் பலர் சேர்ந்து உறுப்பினர் அட்டைகளையும் பெற்றுள்ளனர். முக்கிய கட்சிகளில் வட்ட செயலாளர் மற்றும் பகுதி செயலாளர் பொறுப்பில் இருப்பவர்களும் தங்களது பதவியை உதறி விட்டு ரஜினி கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக ரஜினி மன்ற நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

வருகிற 31-ந்தேதி ரஜினிகாந்த் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பிறகு புத்தாண்டில் மதுரை அல்லது திருச்சியில் கட்சியின் தொடக்க விழா பிரமாண்டமான முறையில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது முடிந்தவுடன் பிற கட்சிகளில் இருந்து ரஜினி கட்சியில் முக்கிய பிரமுகர்கள் பலர் இணைய உள்ளனர். இதனை அந்தந்த பகுதியில் இணைப்பு விழாக்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பூத் கமிட்டிகளை அமைப்பதில் தீவிரம் காட்டி வரும் மக்கள் மன்ற செயலாளர்கள் இதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள்.

இதன் மூலம் புதிதாக பிறக்கும் 2021-ம் ஆண்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்புடனேயே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி புதிய கட்சியை தொடங்குவது குறித்து அறிவித்தவுடன் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அரசியல் கட்சிகளை தாண்டி, பல்வேறு தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும், பெண்கள் அமைப்பினரும் ரஜினியுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று கட்சியில் சேர விரும்புபவர்கள் ‘கரை’ படியாத கரங்களுக்கு சொந்தக்காரர்களா? என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் ரஜினிகாந்த், மன்ற நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டுள்ளார்.