அவனியாபுரத்தில் ராகுல்காந்தி- உதயநிதி சந்திப்பு

மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் திருநாளான இன்று (வியாழக்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த விழாவை காண காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவரான ராகுல்காந்தி மதுரை வருகிறார். அவர், ‘ராகுலின் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பார்வையிடுகிறார்.

இதற்காக ராகுல்காந்தி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு இன்று பகல் 11.30 மணிக்கு வருகிறார்.

சுமார் ஒரு மணி நேரம் அவர் தமிழர்களின் வீர விளையாட்டை மேடையில் அமர்ந்து காண்கிறார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் மேற்பார்வையாளர் தினேஷ்குண்டுராவ், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வருகிறார்கள்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலினும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே ராகுல்காந்தி மதுரை வருகையின் போது, அவரை உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசவும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.