Pudukottai CISF: துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மூடல்

cisf training centre
துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மூடல்

Pudukottai CISF: புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூட உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது, துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை அறந்தாங்கி பகுதியை சேர்ந்த சுரேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திலிருந்து கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி சுடப்பட்ட துப்பாக்கி குண்டு 11 வயது சிறுவர் மீது தவறுதலாக பாய்ந்தது. நான்கு நாட்களுக்கு பிறகு அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துப்பாக்கிச்சூடு தளத்தில் இருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சிறுவன் மீது தவறுதலாக குண்டு பாய்ந்து, அவர் உயிரிழந்துள்ளார். இதற்கு முன்பு இது போன்ற சம்பவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது. எனவே புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூட உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, ஸ்ரீமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் , கடந்த டிசம்பர் 30ம் தேதியே நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டது. இனிவரும் காலங்களிலும் இந்த மையத்தில் துப்பாக்கி சுடும் நிகழ்வு நடைபெறாது. போலீசாருக்கு சாதாரண பயிற்சிகள் மட்டுமே வழங்கப்படும் என கூறப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: Budget 2022: பிப்.1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்!