வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் – மு.க.ஸ்டாலின்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கி வைத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

இது குறித்து கூட்டத்தில் அவர் பேசுகையில், வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வட மாநில விவசாயிகள் ஒன்று திரண்டு 23 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருந்து அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகிறோம்.

கொரோனா காலத்தில் மக்களுக்கு விரோதமான சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின், மக்களை பற்றி கவலைப்படாமல், கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும், விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாடகம் நடத்தி வருவதாகவும் கூறினார்.