செல்போன் வியாபாரியை கடத்தியவர்களை பிடிக்க 2 தனிப்படை

செல்போன் வியாபாரியை கடத்தியவர்களை 2 தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 30). அண்ணா சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். ராஜ்குமார் நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்திச் சென்றனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மர்ம நபர்கள் சென்ற வண்டியை பின்தொடர்ந்து சென்றனர். மேலும் பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அவர்களை பின்தொடர்ந்தனர். அப்போது சென்போன் கடை உரிமையாளரை கடத்தி சென்றவர்கள் ரோடியர் திடல் பகுதிக்கு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்த உடன் அவர்கள் 3 பேரும் ராஜ்குமாரை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர். போலீசார் அவரை பத்திரமாக மீட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். செல்போன் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்த போது காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சுகன்(28), தலைமையிலான கும்பல் தான் ராஜ் குமாரை கடத்தியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ரவுடி சுகன் மீது 2 கொலை வழக்கு உள்பட 23 வழக்குகள் உள்ளன. அவர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த வாரம் தான் ஜெயிலில் இருந்து வெளியே வந்தார். எனவே சுகன் மீண்டும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.