நாளை தமிழகம் வருகிறார் மோடி

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 25-ந் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி வருகிறார். புதுச்சேரியில் காலை 11.30 மணிக்கு பல வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

தொடர்ந்து மாலை 4 மணிக்கு கோயம்புத்தூரில் ரூ.12,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். நெய்வேலியில் புதிய அனல்மின் திட்டத்தை நாட்டுக்கு மோடி அர்ப்பணிக்கிறார்.

இது 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனில் வடிவமைக்கப்பட்ட லிக்னைட் (பழுப்பு நிலக்கரி) அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையம். இதில் உள்ள 2 மின் உற்பத்தி நிலையங்களும் தலா 500 மெகா வாட் திறன் உள்ளது. ரூ.8 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 2,670 ஏக்கர் பகுதியில் அமைக்கப்பட்ட என்.எல்.சி.ஐ.எல். நிறுவனத்தின் 709 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தையும் மோடி அர்ப்பணித்து வைக்கிறார். இந்த திட்டம் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட செலவில் அமைக்கப்பட்டுள்ளது.