மே.வங்க வளர்ச்சியில் மத்திய அரசு கவனம்: மோடி

பிரதமர் மோடி 26ந் தேதி சென்னை வருகை
பிரதமர் மோடி 26ந் தேதி சென்னை வருகை

மேற்கு வங்கத்தின் வளர்ச்சியில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை இன்று துவங்குகிறது. இதை முன்னிட்டு மாநில மக்களுக்கு ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக வாழ்த்து கூறி அவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 12:00 மணிக்கு உரையாற்றினார்.

மோடி பேசியதாவது: மே.வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் நாட்டுக்காக சுயநலமின்றி உழைத்தனர். இந்த மாநிலத்தை சேர்ந்த தியாகிகள், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தனர். இன்னும் சில சாதனையாளர்கள், இந்தியாவின் பாரம்பரியத்தை உலகத்திற்கு கொண்டு சென்றனர். இந்தியாவை, சர்வதேச அளவில் பெருமையடைய செய்தனர். இந்தியாவின் வளர்ச்சியில் மே.வங்கத்தினருக்கு முக்கிய பங்கு உள்ளது.

இந்த முறை கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் துர்கா பூஜையை கொண்டாடுகிறோம்.ஆனால், பண்டிகைக்கான உற்சாகம் குறையவில்லை. இந்த பூஜையில் பங்கேற்பது அதிர்ஷ்டம். மே.வங்க மக்களின் உற்சாகத்தை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. நமது மகள்கள் அனைவரையும் கடவுள் துர்கை போல் நடத்த வேண்டும். இந்தியாவின் பலம் மற்றும் ஒற்றுமையை உணர்த்தும் திருவிழாவாக துர்கா பூஜை உள்ளது. மேலும், இது மே.வங்கத்தின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை உணர்த்துகிறது.

நமது விவசாயிகளுக்கு உதவுவதுடன, அவர்கள் அதிகாரம் பெற உதவ வேண்டும். சுதந்திரத்திற்கான நமது போராட்டத்தில் மே.வங்க மாநிலம் முன்னிலையில் இருந்தது. இந்தியா தன்னிறைவு பெறுவதை மே.வங்கம் உறுதி செய்யும். தன்னிறைவு இந்தியா இயக்கத்தில் மே.வங்க மாநிலம் முக்கிய பங்காற்றும். மத்திய அரசின் திட்டங்களால் 4 லட்சம் வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. கோல்கட்டா மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்துள்ளது.மே.வங்க வளர்ச்சிக்கு மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.கிழக்கு இந்தியா வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறோம். வளர்ச்சியின் புதிய பாதை நோக்கி மேற்கு வங்க மாநிலம் நகரும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமரின் உரையை, மாநிலத்தின் 294 சட்டசபை தொகுதிகளில் உள்ள 78 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ‘பூத்’களிலும் ஒளிபரப்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.