பிளஸ் 2 தேர்வு கட்டாயம் நடக்கும்- மகேஷ் பொய்யாமொழி

மத்திய அரசுடன் நடந்த ஆலோசனைக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி , தமிழகத்தில் கட்டாயம் பிளஸ் 2 தேர்வு நடக்கும் என தெரிவித்தார்.

நிருபர்களிடம் பேசிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கட்டாயம் நடக்கும். கொரோனா பரவல் குறைந்த பிறகு, பிளஸ் 2 தேர்வு தொடர்பாக முடிவு எடுக்கப்படும். மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு நடத்தவில்லை எனில், தமிழகத்தை விட்டு வேறு மாநிலத்திற்கு அல்லது மத்திய கல்வி நிறுவனங்களுக்கு படிக்க செல்லும் மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவே கண்டிப்பாக பிளஸ் 2 தேர்வு நடக்கும்.

சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து மத்திய அரசிடம் வரும் செவ்வாய் கிழமைக்குள் தெரிவிக்கப்படும். ஜேஇஇ நுழைவு தேர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு கூடாது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் நீட் நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.