ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ அதிகாரியாக இந்தியர் நியமனம்

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்தியர் பராக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டுவந்த ஜாக் டோர்சி, தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த பராக் அந்தப் பொறுப்பிற்கு வந்துள்ளார்.

ஐ.ஐ.டி. மும்பையில் இளங்கலை கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்ற பராக், பின்னர் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி முடித்தவர். 2011ஆம் ஆண்டு மென்பொருள் பொறியாளராக ட்விட்டர் நிறுவனத்தில் இணைந்த அவர், தற்போது தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்துள்ளார்.

உலகளவில் ட்விட்டர் சமூக வலைதளம் மிகவும் பிரபலமான ஒன்று. அதிக பயனர்களைக் கொண்டது மட்டுமல்லாமல், அதிகம் பேர் தொடர்ந்து பயன்படுத்தும் சமூக வலைதளமாக ட்விட்டர் விளங்குகிறது.

உலகின் முன்னணி நிறுவனங்களாக உள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரியாக சத்யா நாதெள்ளா ஆகியோரைத் தொடர்ந்து, ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பராக் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னணி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் இந்தியர்கள் தொடர்ந்து நியமிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.